கஞ்சன் என்றால் தாமரையில் இருப்பவன் என்று பொருள். அதாவது பிரம்மதேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலத்திற்கு 'கஞ்சனூர்' என்ற பெயர் ஏற்பட்டது. நவக்கிரகத் தலங்களுள் சுக்கிரன் தலம் இது. நவக்கிரகங்களுள் ஒன்றான சுக்கிரன் சன்னதி இங்கு சிறப்பு. பலர் வந்து பூஜை செய்து பரிகாரம் செய்கின்றனர்.
மூலவர் 'அக்னீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சற்று பெரிய வடிவினராக காட்சி தருகின்றார். அம்பிகை 'கற்பக நாயகி' என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள். அம்பாள் சிறிய வடிவம். சுவாமியும், அம்பாளும் கிழக்கு நோக்கி ஒரே திசையில் காட்சி தருகின்றனர். இருவருக்கும் இடையில் சுப்ரமணியர் சன்னதி உள்ளது. இத்தகைய காட்சி சோமாஸ்கந்த தரிசனம் எனப்படும்.
இக்கோயிலில் உள்ள நந்தி ஒரு பிராமணருக்காக புல் தின்றதாக வரலாறு கூறுகிறது.
பிரகாரத்தில் கல்லால் ஆன நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளனர். அவருக்கு வலதுபுறம் பராசர முனிவர்க்கு காட்சிய தாண்டவ காட்சியும், இடதுபுறம் ஹரதத்தரின் சிற்பமும் உள்ளன.
ஹரதத்த சிவாச்சாரியார் தீயில் பழுக்கக் காய்ச்சிய பீடத்தின்மீது அமர்ந்து சைவ சமயத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய தலம்.
63 நாயன்மார்களுள் ஒருவரான மானகஞ்சார நாயனார் முக்தியடைந்த தலம்.
பிரம்மா, அக்னி, கம்சன் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|